செங்கல்பட்டு
காவலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது - திருட்டை தடுக்க முயன்றபோது தீர்த்து கட்டியதாக வாக்குமூலம்
|திருட்டை தடுக்க முயன்றபோது தீர்த்து கட்டியதாக காவலாளி கொலை வழக்கில் கைதான 3 பேர் வாக்குமூலம் அளித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அருகே செம்மஞ்சேரி குப்பம் பகுதியில் வசித்து வந்தவர் தேசிங்கு. காவலாளியான இவர் கடந்த 17-ந் தேதி சுத்தியலால் தலையில் அடிக்கப்பட்டு மர்மமான முறையில் சென்னை டாக்டரின் பண்னை வீட்டில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து கேளம்பாக்கம் போலீசார் 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். தேசிங்கின் செல்போனை கொலையாளிகள் திருடி சென்று இருந்தனர். அந்த செல்போன் சிக்னலை பின்பற்றியதில் அது பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பெங்களூரு புறப்பட்ட தனிப்படை போலீசார் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தின கூலி தொழிலாளிகள் 3 பேரை கைது செய்தனர். பண்ணை வீட்டில் திருட முயன்றபோது காவலாளி தடுத்ததால் அவரை சுத்தியலால் அடித்து கொலை செய்ததாக அவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து கொலையாளிகளான பாலாஜி, பாண்டியன், தமிழரசன் ஆகிய 3 பேரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.