< Back
மாநில செய்திகள்
ஆசிரியர் வாகனத்தில் இருந்த ரூ.5 லட்சம் திருடிய 3 பேர் கைது
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

ஆசிரியர் வாகனத்தில் இருந்த ரூ.5 லட்சம் திருடிய 3 பேர் கைது

தினத்தந்தி
|
22 Oct 2023 12:15 AM IST

சின்னசேலம் அருகே ஆசிரியர் வாகனத்தில் இருந்த ரூ.5 லட்சம் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டதும் அம்பலமாகி உள்ளது.

சின்னசேலம் அருகே உள்ள மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் செந்தமிழ்செல்வன்(வயது 52). இவர், நயினார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி சேலம் மெயின் ரோட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.4 லட்சத்து 90 ஆயிரத்தை எடுத்து, தனது மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் வைத்தார். பின்னர் ரெயில் நிலையம் சாலையில் உள்ள ஒரு டீ கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு டீ குடித்தார். பின்னர் வந்து பார்த்தபோது டேங்க் கவரில் இருந்த பணத்தை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரிந்தது.

மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து...

இதேபோல் சின்னசேலம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகன் செந்தில்குமார்(43) என்பவர் கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் ரூ.36 ஆயிரத்தை வைத்தார். பின்னர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு வங்கியின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பணம் எடுத்து வந்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைத்திருந்த ரூ.36 ஆயிரத்தை காணவில்லை. இதை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

வழிப்பறி

சின்னசேலம் அடுத்த மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் மணிகண்டன்(36) என்பவர் கடந்த 19-ந் தேதி காலை 9 மணிக்கு சின்னசேலத்தில் இருந்து நயினார்பாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தனியார் மகளிர் பொறியியல் கல்லூரி அருகில் சென்றபோது 3 பேர், அவரை மறித்து தாக்கி ரூ.900-ஐ பறித்துச் சென்றனர். இதேபோல் ஒரு செருப்பு கடையிலும் பணம் கொள்ளை போனது. மேலும் சிலரிடம் வழிப்பறியும் நடந்தது. மேற்கண்ட திருட்டு, வழிப்பறி சம்பவம் தொடர்பாக தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே சின்னசேலம் பகுதியில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவிட்டார்.

3 பேர் கைது

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கனியாமூர் கூட்டுரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சின்னசேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காந்திநகரை சேர்ந்த பொன்னுசாமி மகன் செந்தில்(39), சுப்பிரமணி மகன் குணசீலன்(28), திருவெறும்பூர் நாவல்பட்டு ரோடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் கண்ணன் (40) ஆகியோர் என்பதும், உடற்கல்வி ஆசிரியர் செந்தமிழ்செல்வன், செந்தில்குமார் ஆகியோரது மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தை திருடியதும், மணிகண்டனிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும், சின்னசேலம் மற்றும் திருச்சி பகுதியில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டதும், திருடிய பணத்தை 3 பேரும் பிரித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்