திருவள்ளூர்
பஸ்சில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
|பஸ்சில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நேற்று கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஒரு தனியார் பஸ் மற்றும் ஒரு ஆந்திர மாநில அரசு பஸ் போன்றவற்றில் மொத்தம் 5 பாக்கெட்டுகளில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ எடை கொண்ட கஞ்சா சிக்கியது.
இது தொடர்பாக ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த நீதி ராஜன் (வயது 48), கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த அமோஸ்கான் மோசஸ் (27) ஆகியோரை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக கஞ்சா கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் தமிழக எல்லை பகுதியில் உள்ள பொன்பாடி சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்தை நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.
போலீசாரை கண்டவுடன் இளைஞர் ஒருவர் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை பிடித்து உடமைகளை சோதனை செய்யும்போது 6 கிலோ 300 கிராம் கஞ்சா பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்தது. போலீஸ் விசாரனையில் கஞ்சா கடத்திய இளைஞர் சென்னை கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த பரசுராமன் (வயது 23) என்பதும் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்த முயன்றது தெரியவந்தது. பின்னர் கஞ்சா கடத்திய நபரை கைது செய்து திருத்தணி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஜர் படுத்தி பரசுராமனை சிறையில் அடைத்தனர்.