< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி நகைக்கடையில் கொள்ளையடித்த 3 பேர் கைது  18½ கிலோ நகைகள் மீட்பு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி நகைக்கடையில் கொள்ளையடித்த 3 பேர் கைது 18½ கிலோ நகைகள் மீட்பு

தினத்தந்தி
|
1 Sept 2022 10:44 PM IST

கள்ளக்குறிச்சி நகைக்கடையில் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 18½ கிலோ நகைகள் மீட்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி புதூரில் ஸ்ரீகுமரன் ஸ்வர்ண மகால் என்ற பெயரில் நகைக்கடை இயங்கி வருகிறது. கடந்த மாதம் 7-ந்தேதி நள்ளிரவு இக்கடை கதவின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் உள்ளே புகுந்து 281 பவுன் நகைகள், 30 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த வழக்கில் துப்புதுலக்கி குற்றவாளிகளை கைது செய்ய கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சிறப்பு குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

வட மாநிலத்தை சேர்ந்தவர்கள்

இந்த தனிப்படை போலீசார் நகைக்கடை மற்றும் அருகில் வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் வட மாநிலத்தை சேர்ந்த 4 பேர் கடந்த 7-ந்தேதி மதியம் நகைக்கடையை நோட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை கொண்டு ஆய்வு செய்ததில் அந்த வாகனங்கள் புதுச்சேரியில் இருந்து வாடகைக்கு எடுத்து வரப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் மராட்டிய மாநிலம் பூனா மாவட்டம் அம்பி கிராமத்தை சேர்ந்த பூலா ரத்தோட் மகன் லாலா பூலா ரத்தோட், குலாப்சிங் ரத்தோட் மகன் ராமதாஸ் குலாப்சிங் ரத்தோட், மாலுவாலு கிராமத்தை சேர்ந்த பகவான் நானாவத் மகன் அஜய் பகவான் நானாவத், தக்காவே கிராமத்தை சேர்ந்த மத்யா நானாவத் மகன் சர்னால் மத்யா நானாவத் ஆகியோர் என்பதும், இவர்கள் அனைவரும் புதுச்சேரியில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை திருப்பதி, மராட்டியம், குஜராத், ஆமதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.

3 பேர் கைது

இதனிடையே கொள்ளையர்கள் புதுச்சேரியில் தங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பதுங்கி இருந்த லாலா பூலா ரத்தோட், அஜய் பகவான் நானாவத், சர்னால் மத்யா நானாவத் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1½ கிலோ தங்க நகைகள் மற்றும் 17 கிலோ வெள்ளிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் திருடப்பட்ட 20 கிராம் நகையை புதுச்சேரியில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனை செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டு அந்த நகையும் மீட்கப்பட்டது.

இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய ராமதாஸ் குலாப்சிங் ரத்தோட் என்பவரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

மேலும் செய்திகள்