< Back
மாநில செய்திகள்
நந்தம்பாக்கத்தில் போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய 3 பேர் கைது
சென்னை
மாநில செய்திகள்

நந்தம்பாக்கத்தில் போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய 3 பேர் கைது

தினத்தந்தி
|
30 Oct 2022 2:16 PM IST

நந்தம்பாக்கத்தில் போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் தேவன் (வயது 31). இவர் பரங்கிமலை போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். நேற்று பூந்தமல்லி நெடுஞ்சாலையை பொக்லைன் எந்திரம் கொண்டு சீரமைக்கும் பணி நடந்தது. மணப்பாக்கம் போக்குவரத்து சிக்னல் அருகே பணியில் ஈடுபட்டிருந்த தேவன், சாலை சீரமைப்பு பணிக்காக உதவியும் செய்து கொண்டு இருந்தார்.

அப்போது போரூரில் இருந்து கிண்டி நோக்கி வந்த கார், பணி நடக்கும் இடத்தில் திரும்ப முயன்றது. சற்று தள்ளி, 'யூ-டர்ன்' செய்யுமாறு தேவன் கூறினார். காரில் குடிபோதையில் இருந்த 3 பேர், தேவனிடம் தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவரை தள்ளிவிட்டு பீர்பாட்டிலால் தாக்க முயன்றனர். கூட்டம் கூடவே காரில் ஏறி தப்பிச்சென்றனர்.

இது தொபர்பாக போலீஸ்காரர் தேவன் அளித்த புகாரில் நந்தம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சம்பவம் தொடர்பாக ஐ.டி. ஊழியர்களான சாலிக்கிராமம் சியாமளா கார்டனை சேர்ந்த ஆதித்யா (28), அஸ்வின் (28), வேளச்சேரி தண்டீஸ்வரம் மெயின்ரோட்டை சேர்ந்த மதுசூதனன் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காரில் இருந்த 11 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்