திருவாரூர்
கதிர் அறுவடை எந்திரத்தின் உதிரிபாகத்தை திருடிய 3 பேர் கைது
|கதிர் அறுவடை எந்திரத்தின் உதிரிபாகத்தை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கீராளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேல். இவருக்கு சொந்தமான கதிர் அறுவடை எந்திரத்தில் இருந்து ரூ.2½ லட்சம் மதிப்பிலான ஹைட்ராலிக் பம்பை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து அவர் ஆலிவலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் தனிப்படை அமைத்தார். தனிப்படை போலீசார் பிரான்சிஸ், பாலா, தேவதாஸ், சக்திவேல் ஆகியோர் ஹைட்ராலிக் பம்பை திருடிச்சென்றவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ்(வயது 22), செல்லப்பா(22), ஆறுமுகம்(28) ஆகியோர் ஹைட்ராலிக் பம்பை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று 3 பேரையும் கைது செய்து ஆலிவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பநாதன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஹைட்ராலிக் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.