< Back
மாநில செய்திகள்
ரூ.25 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல்   அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது
திருவாரூர்
மாநில செய்திகள்

ரூ.25 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது

தினத்தந்தி
|
16 July 2022 11:56 PM IST

திருத்துறைப்பூண்டியில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருத்துறைப்பூண்டியில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

லாட்டரி சீட்டுகள் விற்பனை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் ஆங்காங்கே விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து திருத்துறைப்பூண்டி போலீசார் தனிப்படை அமைத்து லாட்டரி டிக்கெட் வெளியூரிலிருந்து எப்படி வருகிறது? பார்சல் மூலம் வருகிறதா? அல்லது வாகனங்கள் மூலம் ரகசியமாக கொண்டு வரப்படுகிறதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

மாறுவேடத்தில் போலீசார் கண்காணிப்பு

இந்த நிலையில் திருச்சி பகுதியில் இருந்து ரூ25 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிங்காரவேலு, மனோகரன் மற்றும் போலீசார் மாறுவேடத்தில் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அண்ணன்-தம்பி

அப்போது பெரிய பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த லாட்டரி சீட்டுகளுடன் 2 பேர் பிடிபட்டனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் முல்லை நகர் காரைக்கால் ரோடு பகுதியை சேர்ந்த சகோதரர்கள் அருண்குமார் (வயது 37), மகாலிங்கம் (36) ஆகியோர் என்பது தெரியவந்தது.

3 பேர் கைது

இவர்கள் திருச்சியில் இருந்து லாட்டரி சீட்டுகளை கொண்டு வந்ததும், அதன் மதிப்பு ரூ.25 லட்சம் மதிப்புடையது என்பதும் தெரியவந்தது.

இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி குறும்பல் பகுதியை சேர்ந்த தியாகராஜன்(60) என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அருண்குமார், மகாலிங்கம், தியாகராஜன் ஆகிய 3 பேரையும் கைது செய்து லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்