< Back
மாநில செய்திகள்
ஊட்டியில் 2-வது சீசன் மலர் கண்காட்சி
நீலகிரி
மாநில செய்திகள்

ஊட்டியில் 2-வது சீசன் மலர் கண்காட்சி

தினத்தந்தி
|
30 Sept 2023 2:00 AM IST

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனுக்கான மலர் கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

ஊட்டி

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனுக்கான மலர் கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

2-வது சீசன்

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் முதல் சீசனும், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் களைகட்டும். அதன்படி தற்போது 2-வது சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது.

இதையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் பூந்தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. மேலும் 125 ரகங்களை சேர்ந்த 4 லட்சம் மலர் செடிகள் நடைபாதை ஓரங்கள், மலர் பாத்திகள், மரங்களின் அடிவாரத்தில் நடவு செய்யப்பட்டன. அதில் பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.

மலர் கண்காட்சி

இந்த நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனுக்கான மலர் கண்காட்சி தொடங்கி உள்ளது. இந்த கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். அங்கு பசுமை தமிழகம் என்ற கருத்தை வலியுறுத்தி மலர்களால் ஆன வடிவமைப்பு காட்சி திடலில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் 7,500 மலர் தொட்டிகளை கொண்டு புல்வெளியில் சந்திரயான் விண்கல அலங்காரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

மீண்டும் மஞ்சப்பை

இது தவிர பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை வலியுறுத்தும் வகையில் 1,000 மலர் தொட்டிகளால் ஆன வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 2-வது சீசனுக்கு 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் மாவட்ட கலெக்டர் அருணா, தோட்டக்கலை இணை இயக்குனர் ஷிபிலா மேரி, துணை இயக்குனர் பாலசங்கர், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்