< Back
மாநில செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் பதிவிற்கான 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் தொடங்கின
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் பதிவிற்கான 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் தொடங்கின

தினத்தந்தி
|
6 Aug 2023 12:00 AM IST

கலைஞா் மகளிர் உரிமை தொகை பெற பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் தொடங்கின.

கலைஞர் மகளிர் உரிமை திட்டம்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி முதல் தமிழக அரசு வழங்கவுள்ளது. இந்த திட்டத்திற்கான குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்ய பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே முதற்கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்று முடிந்தது.

அதனை தொடர்ந்து 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் பெரம்பலூர் நகராட்சி பகுதியிலும், பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, குன்னம் தாலுகாக்களில் இதுவரை சிறப்பு முகாம்கள் நடைபெறாத மீதமுள்ள பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் நேற்று தொடங்கின.

ஆர்வத்துடன் வந்த குடும்ப தலைவிகள்

இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் ஏற்கனவே அந்தந்த ரேஷன் கடை பணியாளர்கள் மூலமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று வினியோகிக்கப்பட்டன. குடும்ப தலைவிகள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாமிற்கு, டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், மின் கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் குடும்ப தலைவிகள் ஆர்வத்துடன் வந்து பதிவு செய்து விட்டு சென்றனர்.

குடும்ப தலைவிகளின் ஒவ்வொருவரின் விவரங்களை பதிவு செய்யவும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய இயலாதவர்களுக்கு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் உதவி புரிந்தனர். குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்களை இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் ஆன்லைனில் பதிவு செய்தனர். பெரம்பலூர் சங்குப்பேட்டை சமுதாயக்கூடம், மதனகோபாலசுவாமி கோவில் அருகே உள்ள திருமண மண்டபம், அரசு மருத்துவமனை எதிரே உள்ள விடுதி கட்டிடம், செங்குணம் அரசு பள்ளி ஆகிய பகுதிகளில் நடந்த முகாம்களை கலெக்டர் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

16-ந்தேதி வரை நடக்கிறது

2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் வருகிற 16-ந்தேதி வரை நடக்கிறது. முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெறும். முகாம்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 18004254556 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

செங்குணம் அரசு பள்ளியில் நடந்த முகாமிற்கு வருகை தரும் குடும்பத்தலைவிகளை வரவேற்கும் விதமாக திருவிழாவிற்கு ஏற்பாடு செய்வது போல் பந்தலிட்டு, அதில் மாவிலைகளை தோரணங்களாக கட்டி, பந்தலின் முகப்பில் வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்