பெரம்பலூர்
கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை பதிவு செய்ய 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம்
|கலைஞா் மகளிர் உரிமை திட்ட தொகையை பெற பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவு செய்ய பெரம்பலூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமை திட்டம்
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 பெற தகுதியான குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்ய பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே முதற்கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்கள் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது.
2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் பெரம்பலூர் நகராட்சி பகுதியிலும், பேரூராட்சிகள், வட்டாரங்களில் இதுவரை சிறப்பு முகாம்கள் நடைபெறாத மீதமுள்ள பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளிலும் நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது. விண்ணப்ப பதிவு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.
விண்ணப்பங்கள்-டோக்கன் வினியோகம்
இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் கடந்த 1-ந்தேதி முதல் அந்தந்த ரேஷன் கடை பணியாளர்கள் மூலமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கும் சென்று வினியோகிக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாமிற்கு, டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் குறித்த நேரத்தில் மட்டும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், மின்கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் சென்று பதிவு செய்திட வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம் வருமாறு:- பெரம்பலூர் தாலுகாவில் பெரம்பலூர் (வடக்கு) கிராமத்திற்குட்பட்ட கோனேரிப்பாளையம், துறைமங்கலம் கிராமத்திற்குட்பட்ட கவுல்பாளையம், கல்பாடி (வடக்கு, தெற்கு), செங்குணம், கீழக்கரை, எளம்பலூர், எசனை, நொச்சியம், புதுநடுவலூர், அரணாரை (வடக்கு), சிறுவாச்சூர், அயிலூர் ஆகிய கிராமங்களிலும், வேப்பந்தட்டை தாலுகாவில் அகரம், பிம்பலூர், திருவாளந்துறை, அயன்பேரையூர், எறையூர், பில்லாங்குளம், தேவையூர் (தெற்கு, வடக்கு), பெரியவடகரை, வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம் (தெற்கு, வடக்கு), நூத்தப்பூர் (தெற்கு, வடக்கு), பிரம்மதேசம், பசும்பலூர் (தெற்கு, வடக்கு), கை.களத்தூர் (மேற்கு, கிழக்கு), அணுக்கூர், காரியானூர், தொண்டபாடி, வி.களத்தூர், நெய்குப்பை, பாண்டகபாடி ஆகிய கிராமங்களிலும் 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.
குன்னம், ஆலத்தூர் தாலுகா
குன்னம் தாலுகாவில் எழுமூர் (கிழக்கு, மேற்கு), மழவராயநல்லூர், ஆண்டிக்குரும்பலூர், அசூர், நன்னை (கிழக்கு, மேற்கு), பேரளி (தெற்கு, வடக்கு), கீழப்புலியூர் (வடக்கு, தெற்கு), சித்தளி (கிழக்கு, மேற்கு), ஒதியம், சிறுமத்தூர், பெருமத்தூர் (தெற்கு, வடக்கு) ஆகிய கிராமங்களிலும், ஆலத்தூர் தாலுகாவில் மேலமாத்தூர், சிறுகன்பூர் (கிழக்கு, மேற்கு), தொண்டபாடி, அயினாபுரம், ஆதனூர் (தெற்கு, வடக்கு), கொட்டரை, நொச்சிகுளம், சாத்தனூர், காரை (கிழக்கு, மேற்கு), தெரணி, வரகுபாடி, கொளக்காநத்தம், கொளத்தூர் (கிழக்கு), அழகிரிபாளையம், சில்லக்குடி (தெற்கு, வடக்கு), புஜங்கராயநல்லூர், கூடலூர், ஜெமீன் ஆத்தூர், திம்மூர், கூத்தூர் ஆகிய கிராமங்களிலும் 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.
இதேபோல் பெரம்பலூர் நகராட்சி பகுதியில் பெரம்பலூர் (வடக்கு, தெற்கு), துறைமங்கலம், அரணாரை (தெற்கு) ஆகிய பகுதிகளிலும் 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 18004254556 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.