< Back
மாநில செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை பதிவு செய்ய 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம்
அரியலூர்
மாநில செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை பதிவு செய்ய 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம்

தினத்தந்தி
|
4 Aug 2023 1:14 AM IST

கலைஞா் மகளிர் உரிமை திட்ட தொகையை பெற பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவு செய்ய 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமை திட்டம்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 பெற தகுதியான குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்ய அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே முதற்கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்கள் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது.

2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் தாலுகாக்களில் உள்ள ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் இதுவரை சிறப்பு முகாம்கள் நடைபெறாத மீதமுள்ள பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளிலும் நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது. விண்ணப்ப பதிவு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.

விண்ணப்பங்கள்-டோக்கன் வினியோகம்

இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் கடந்த 1-ந்தேதி முதல் அந்தந்த ரேஷன் கடை பணியாளர்கள் மூலமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கும் சென்று வினியோகிக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாமிற்கு, டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் குறித்த நேரத்தில் மட்டும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், மின்கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் சென்று பதிவு செய்திட வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே அரியலூர், செந்துறை வட்டாரங்களில் உள்ள ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் முதற்கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. தற்போது 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் ஜெயங்கொண்டம் தாலுகாவில் 162 ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளிலும், ஆண்டிமடம் தாலுகாவில் 67 ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.

தொலைபேசி எண்கள்

2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை 04329-228709 என்ற தொலைபேசி எண்ணிலும், 9384056231 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், தாசில்தார் அலுவலக கட்டுப்பாட்டு அறைகளை 04331-250220 (ஜெயங்கொண்டம்), 04331-299800 (ஆண்டிமடம்) என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் செய்திகள்