தூத்துக்குடி
மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கியது
|தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் நேற்று தொடங்கியது.
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து பயனாளிகளை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த திட்டத்துக்கான விண்ணப்ப பதிவு முகாம் அனைத்து ரேஷன் கடை பகுதிகளிலும் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் கட்ட முகாம் கடந்த மாதம் (ஜூலை) 24-ந்தேதி முதல் கடந்த 4-ந் தேதி வரை நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 980 ரேஷன் கடைகளில் 600 ரேஷன் கடை பகுதிகளில் முகாம் நடந்தது.
மேலும் நேற்று பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சிறப்பு முகாம் வழக்கம் போல் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று வழக்கம் போல் சிறப்பு முகாம்கள் நடந்தன. இதில் 380 ரேஷன் கடை பகுதிகளிலும் 2-வது கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம் நேற்று தொடங்கியது. இந்த முகாம் வருகிற 16-ந் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. இதனால் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் ஏற்கனவே வழங்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.