2-வது நாள் வேலைநிறுத்தம்: தமிழகம் முழுவதும் வழக்கம்போல் பஸ்கள் இயக்கம்
|பஸ்கள் சீராக இயக்கப்படுவதால் பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்து வருகின்றனர்.
சென்னை,
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9-ந் தேதி (அதாவது நேற்று) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இதனையடுத்து திட்டமிட்டபடி பஸ் ஊழியா்கள் வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்திய போதிலும் தமிழகம் முழுவதும் பஸ்கள் நேற்று வழக்கம்போல் ஓடின. போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிலையில், 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் 2-வது நாளாக இன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் சென்னை, கோவை, மதுரை, சேலம், நெல்லை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 100.62% பஸ்கள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 111.75% பஸ்களும், விழுப்புரம் 97.77%, சேலம் 97.24%, கோவை 94.04%, கும்பகோணம் 98%, மதுரை 98.71%, நெல்லை 100%, மதுரை 99.07% பஸ்கள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பஸ்கள் சீராக இயக்கப்படுவதால் பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்து வருகின்றனர்.