சேலம்
சென்னை இளம்பெண் 2-வது நாளாக தர்ணா போராட்டம்
|ஆத்தூரில் காதல் கணவரின் பூட்டிய வீட்டின் முன்பு 2-வது நாளாக சென்னை இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்
ஆத்தூர்:-
ஆத்தூரில் காதல் கணவரின் பூட்டிய வீட்டின் முன்பு 2-வது நாளாக சென்னை இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம்
ஆத்தூர் ெரயில் நிலையம் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் ஓய்வுபெற்ற போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். இவருடைய மகன் விக்னேசுக்கும் (வயது 23), சென்னை தரமணியை சேர்ந்த தீபிகா (23) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 'இன்ஸ்டாகிராம்' மூலம் அறிமுகம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மலர்ந்தது.
இந்த சமூக வலைதள காதல், ஒரு கட்டத்தில் திருச்சியில் மேற்படிப்புக்காக காதலர்கள் இருவரும் ஒரே அறையில் தங்கி படிக்கும் அளவுக்கு வளர்ந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த ஆண்டு விக்னேஷ், தனது காதலியிடம் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வந்தவர் அதன்பிறகு தொடர்பு கொள்ளவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த தீபிகா, ஆத்தூருக்கு கடந்த ஏப்ரல் மாதம் வந்தார். பின்னர் அவர் தனது காதலரை சேர்த்து வைக்க கோரி ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். இதையடுத்து ஒரு மாதம் கணவன்-மனைவியாக சென்னையில் உள்ள தீபிகாவின் வீட்டில் அவர்கள் குடும்பம் நடத்தினர்.
கணவர் குடும்பத்தினர் போராட்டம்
இந்த நிலையில் பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு விக்னேஷ் ஆத்தூருக்கு வந்தார். அதன்பிறகு தீபிகாவை பார்க்க அவர் செல்லவில்லை. இதனால் தீபிகா தனது கணவரை தேடி ஆத்தூரில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்தார். உடனே கணவர் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.
அங்கு ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ரவி தனது மகனுக்கு போலீசார் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் வாழ்க்ைகயே போய் விட்டது என்று கூறி, மகன், மனைவியுடன் தர்ணா போராட்டம் நடத்தினார். அவர்களிடம் கோர்ட்டு மூலம் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுமாறு போலீசார் அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
அதே நேரத்தில் வீட்டில் இருந்த தனது மகளை தீபிகாவும், அவருடன் வந்தவர்களும் சேர்த்து தாக்கி விட்டதாக ஆத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ரவி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேநேரத்தில் ரவியின் வீட்டுமுன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தீபிகாவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் இருதரப்பினரும் பெரியவர்களை கொண்டு பேசி தீர்த்து கொள்ளுங்கள், முடியாத பட்சத்தில் கோர்ட்டில் தீர்வு காணுங்கள் என்று கூறினர். இதையடுத்து அவர்கள் அனைவரும் நேற்று இரவு போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
2-வது நாளாக போராட்டம்
ஆனால் போலீசாரின் சமரசத்தை ஏற்க மறுத்த தீபிகா நேற்று 2-வது நாளாக காதல் கணவர் விக்னேஷின் பூட்டிய வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற ஆத்தூர் போலீசார் அவரிடம் விசாரித்தனர்.
அப்போது தீபிகா, 'நான் எனது கணவர் வீட்டில் தான் இருப்பேன். எனக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. விக்னேஷ் வரட்டும், அவருடன் தனியாக பேச வேண்டும். அவரை என்னுடன் சந்திக்க விடாமல் அவரது தந்தை ரவி தடுத்து வருகிறார். எனவே கணவர் விக்னேஷ் வந்த பிறகு தான் நான் இங்கிருந்து கிளம்புவேன். அதுவரை இந்த வீட்டில் தான் இருப்பேன்' என்று கூறினார்.
இதையடுத்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசாரும், ஆத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரும் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு அங்கிருந்து செல்லுமாறு கூறிவிட்டு புறப்பட்டு சென்றனர்.
இந்த நிலையில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ரவி குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லை என்பதால் நேற்று பகலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தீபிகா, அந்த வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று அங்கு போராட்டத்தை தொடர்ந்தார். இதையறிந்து மீண்டும் அங்கு சென்று போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.