3 ஆண்டுகளில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை
|3 ஆண்டுகளில் ரூ.3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியாவிலேயே முதன் முறையாக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 1970-ம் ஆண்டில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தை தொடங்கி வைத்தார்.குடிசைப் பகுதிகளை மேம்படுத்துவதே இந்த வாரியத்தின் முதன்மையான நோக்கமாகும்.
நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வீட்டுவசதி வாய்ப்புகள் மட்டுமே போதுமானவை அல்ல. அவர்களுக்குக் குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம் போன்ற போதுமான நகர்ப்புற வசதிகளுடன் வீட்டுவசதிகளை ஏற்படுத்துவதும் அவசியம் என்று கருதி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1.9.2021 அன்று தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டார்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் சாதனைகள் படைத்து வரும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் இவ்வேளையில் திராவிட மாடல் அரசின் சாதனைகளைத் திரும்பிப் பார்க்கும் போது பிரமிப்பாகவே உள்ளது. சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களை மேம்படுத்தும் வகையில் திட்டங்களைத் தீட்டித் தாமதமின்றிப் பயன்கள் மக்களைச் சென்றடையச் செய்திடும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.
எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையை ஏற்படுத்திட உட்கட்டமைப்புத் திட்டங்களைக் குறித்த காலத்திற்குள் திட்டமிட்டபடி நிறைவேற்றுவதற்கு முதல்-அமைச்சர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தில் சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மக்களுக்கு வீடுகளைத் தாமதமின்றி வழங்கி வருகிறார்.
வீடற்ற மக்களுக்கு வீட்டினை அளிப்பதோடு இக்குடியிருப்புகளில் ஒரு பல்நோக்கு அறை, உறங்கும் அறை, சமையலறை, கழிவறை வசதிகளும், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வசதி, மின்தூக்கி, சாலைகள், தெருமின் விளக்குகள், கான்கிரீட் நடைபாதை, மழைநீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகளுடன் ஏற்படுத்தி வருகிறார்.
மேலும், சமூக வசதிகளான பள்ளிகள், நூலகம், பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையம், சிறுகடைகள், பால் விற்பனை நிலையம், சமுதாயக்கூடம் போன்ற வசதிகள் குடியிருப்புகளின் அருகில் அமைந்திட ஆவன செய்திடுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்புகள் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் இதுநாள் வரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 92 திட்டப் பகுதிகளில் 3,197.94 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டு வீடற்ற ஏழை எளிய மக்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.
அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு
இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை, 37,720 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் 3,023 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான விற்பனை பத்திரங்கள் மற்றும் 1,733 மேம்படுத்தப்பட்ட மனைகளுக்கும் விற்பனை பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டம்
மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின்கீழ் மூன்றாண்டுகளில், 1,68,495 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 89,429 பயனாளிகளுக்குப் பணி ஆணைகள் வழங்கப்பட்டுப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. மேலும், மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2,078.37 கோடி திட்டமதிப்பீட்டில் 69,701 புதிய தனி வீடுகள் கட்டுவதற்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம்
சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக 17 திட்டப் பகுதிகளில் உள்ள 7,582 சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் ரூ.1,608.88 கோடி மதிப்பீட்டில் 9,522 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
பழுது நீக்குதல் மற்றும் புதுப்பித்தல் பணிகள்
ஏற்கனவே கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டமைப்பு உறுதித்தன்மை மற்றும் ஆயுட்காலத்தினை அதிகரிக்க ரூ.59.80 கோடி செலவில் பழுது நீக்குதல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ள 117 திட்டப் பகுதிகளில் 76,434 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
புனரமைப்புப் பணிகள்
சென்னை மற்றும் இதர நகரங்களில் உள்ள 79 திட்டப் பகுதிகளில் உள்ள 31,239 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குக் கட்டமைப்பு வசதிகளை ரூ.82.57 கோடி செலவில் மேம்படுத்த இறுதி செய்யப்பட்டுப் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், நகர்ப்புற மக்களின் திறன்களை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு இனங்களில் 4,771 பேருக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஏழை, எளிய மக்களின் வீட்டிற்கான கனவை நிறைவேற்றி அனுதினமும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்லும் முதல்-அமைச்சருக்கு ஏழை, எளிய மக்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.