அரியலூர்
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 282 மனுக்கள் பெறப்பட்டன
|அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 282 மனுக்கள் பெறப்பட்டன.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் நடைபாதை வசதி, முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 282 மனுக்களை அளித்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. பொது செயலாளர் தண்டபாணி தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- அரியலூர் 10-வது வார்டில் சிங்காரத்தெரு அமைந்துள்ளது. பெயரில் தான் 'சிங்காரம்' என அழகு தெரிகிறதே தவிர இத்தெருவில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. குறிப்பாக இந்த தெரு குப்பை கூளமாகவும், அலங்கோலமாகவும் காட்சியளிக்கிறது. குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல முறையாக வடிகால் வசதி செய்து தரப்படாததால் கழிவுநீர் அங்குள்ள குட்டையில் கலக்கிறது. இதனால் குட்டையில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் குட்டையை சுற்றிலும் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் விஷ ஜந்துகளின் நடமாட்டம் உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு குட்டையில் கழிவுநீர் கலக்காமலும், அங்கு அடர்ந்து வளர்ந்துள்ள முட்புதர்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.