< Back
மாநில செய்திகள்
28-ந்தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் பட்டதாரி பெண் தற்கொலை - குளியல் அறையில் தூக்கில் தொங்கினார்
சென்னை
மாநில செய்திகள்

28-ந்தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் பட்டதாரி பெண் தற்கொலை - குளியல் அறையில் தூக்கில் தொங்கினார்

தினத்தந்தி
|
10 Aug 2022 5:47 PM IST

28-ந்தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகள் திவ்யா (வயது 22). பி.காம் படித்து முடித்துவிட்டு எம்.சி.ஏ. படிக்க இருந்தார். இதற்கிடையில் திவ்யாவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

அதன்படி ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த ஒருவருக்கும், திவ்யாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர். வருகிற 28-ந் தேதி இவர்களது திருமணம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் திவ்யா, தனது பெற்றோரிடம் தான் படிக்க வேண்டும். எனவே இப்போதைக்கு தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி வந்ததாக தெரிகிறது.

இதனால் திவ்யாவின் பெற்றோர், அவரை ஆவடியை அடுத்த பங்காருபேட்டை கிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் அவருடைய தாய் மாமாவான மோட்டார் சைக்கிள் மெக்கானிக் ரமணா (40) வீட்டில் தங்க வைத்தனர். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக திவ்யா, தனது தாய் மாமா வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை திவ்யாவின் தாயார் அவருக்கு போன் செய்தார். அப்போது திவ்யா, தனது தாயுடன் போனில் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. பின்னர் போனை வைத்துவிட்டு குளித்துவிட்டு வருவதாக தனது அத்தையிடம் கூறிச்சென்றார்.

நீண்ட நேரமாகியும் குளியல் அறையில் இருந்து அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ரமணாவின் மனைவி, அங்கு சென்று பார்த்தபோது, குளியல் அறையில் திவ்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, திவ்யாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்