நில அளவையாளர், வரைவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 27-ந் தேதி கடைசி நாள் - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
|தேர்வர்கள் விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள செப்டம்பர் 1 முதல் 3-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்படும்.
சென்னை,
நில அளவையாளர், வரைவாளர், அளவர் மற்றும் உதவி வரைவாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, 798 நில அளவையாளர், 236 வரைவாளர், 55 அளவர் மற்றும் உதவி வரைவாளர் என மொத்தம் ஆயிரத்து 89 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 27-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
தேர்வர்கள் விண்ணப்பித்த விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்படும். இவர்களுக்கான தேர்வு 2 தாள்களாக நடத்தப்பட உள்ளது. அந்த வகையில் நவம்பர் மாதம் 6-ந் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வும், அதே நாள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 2-ம் தாள் தேர்வும் நடைபெற உள்ளன.
இதில் முதல் தாள் தேர்வு ஐ.டி.ஐ. தரத்திலும், 2-ம் தாள் தேர்வில் தமிழ் தகுதித்தேர்வு எஸ்.எஸ்.எல்.சி. தரத்திலும், பொதுப்பாடம் ஐ.டி.ஐ. தரத்திலும் வினாக்கள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முதல் தாள் தேர்வு 200 வினாக்கள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்ணுக்கும், 2-ம் தாள் தேர்வில் தகுதித்தேர்வு 150 மதிப்பெண்ணுக்கும், பொதுப்பாடம் 150 மதிப்பெண்ணுக்கும் நடக்க உள்ளது. 2-ம் தாள் தேர்வில் தகுதித்தேர்வில் 40 சதவீத மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பொதுப்பாட மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும். அந்த வகையில் மொத்தம் 450 மதிப்பெண்ணுக்கு வினாக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.