பெரம்பலூர்
தமிழ் இலக்கிய திறனறி தேர்வினை 2,762 பேர் எழுதினர்
|பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ் இலக்கிய திறனறி தேர்வினை 2,762 பேர் எழுதினர். 54 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தமிழ் இலக்கிய திறனறி தேர்வு
தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்தி கொள்ளும் வகையில் இந்த கல்வியாண்டு முதல் தமிழ் இலக்கிய திறனறி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளி கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இத்தேர்வில் 50 சதவீத அரசுப்பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதத்திற்கு அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தநிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது பிளஸ்-1 பயின்று வரும் மாணவ-மாணவிகளில் 2,816 பேர் தமிழ் இலக்கிய திறனறி தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.
9 மையங்களில் நடந்தது
இந்த தேர்வானது பெரம்பலூர் அரசுமேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 9 மையங்களில் நேற்று நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நடந்தது. ஒரே வார்த்தையில் விடையளித்து, அதனை ஓ.எம்.ஆர். விடைத்தாளில் ஷேடோ செய்யும் வகையில் தேர்வு நடத்தப்பட்டது.
தேர்வு மையங்களை அரசு தேர்வுகள் துறை துணை இயக்குனர் சுரேஷ் நேரில் சென்று தேர்வு குறித்த நேரத்தில் தொடங்கி விட்டதா? என்பது குறித்தும், தேர்வு எழுத போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் மைய பொறுப்பாளரிடம் தேர்வுக்கு வருகை புரிந்துள்ள மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை குறித்தும் அவர் கேட்டறிந்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த தமிழ் இலக்கிய திறனறி தேர்வினை 2,762 பேர் பங்கேற்று தேர்வினை ஆர்வத்துடன் எழுதினர். 54 பேர் மட்டும் தேர்வுக்கு வரவில்லை.