< Back
மாநில செய்திகள்
அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் 274 பேர் தேர்ச்சி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் 274 பேர் தேர்ச்சி

தினத்தந்தி
|
21 Oct 2023 11:50 PM IST

கடந்த ஆண்டில் உயர்கல்விக்கான போட்டித்தேர்வில் அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் 274 பேர் தேர்ச்சி பெற்றதாக அதிகாரி தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட அரசு மாதிரிப்பள்ளிக்கு தேர்வு செய்யப்பட்ட 9, 10, 11-ம் வகுப்புகளை சேர்ந்த 409 மாணவர்களில் இதுவரை பள்ளியில் சேர்ந்திராத 155 மாணவ, மாணவிகளை வரவழைப்பதற்கான ஆலோசனை கூட்டம் முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாதிரிப்பள்ளிகளின் கரூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:- அரசுப்பள்ளி மாணவர்களை வாழ்விலும், சமூகத்திலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் கொண்டு வரப்பட்ட கனவு திட்டம் தான் அரசு மாதிரிப்பள்ளிகளாகும். மாவட்டத்திற்கு ஒரு பள்ளி வீதம் 38 மாவட்டங்களிலும் மாதிரிப்பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

போட்டித்தேர்வுகள்

அரசு பள்ளிகளில் சிறப்பாக பயிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதிரிப்பள்ளிகளில் 9,10,11 ஆகிய வகுப்புகளில் சேர்க்கப்படுகின்றனர். அதனைத் தொடர்ந்து 9- ம் வகுப்பு முதலே அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயார் படுத்தப்படுகின்றனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மிகச் சவாலாக தோன்றும் நீட், ஜே.இ.இ. உள்பட உயர்கல்விக்கான போட்டித்தேர்வுகளில் கடந்த ஆண்டு அரசு மாதிரிப்பள்ளிகளில் படித்த 274 மாணவர்கள் தேர்ச்சி பெற்று இந்தியாவில் பல உயர்கல்வி நிறுவனங்களில் படித்து வருகின்றனர். இத்தகைய பல சிறப்புகளை பெற்ற மாதிரிப்பள்ளிகளை அரசுப்பள்ளி மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்