கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு இன்று முதல் 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
|கார்த்திகை தீபத் திருவிழாவைக் காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
சென்னை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருநாள் மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக இன்று முதல் 27-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் 2,700 சிறப்பு பேருந்துகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளன.
மேலும் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக 40 சிற்றுந்துகள் பயணிகள் கட்டணமில்லா சிற்றுந்துகளாக இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கிடவும், பக்தர்களுக்கு எவ்விதமான அசவுகரியமும் ஏற்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.