அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் 26-ந்தேதி உள்ளூர் விடுமுறை
|அரியலூர் மாவட்டத்தில் 26-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில், யுனஸ்கோவால் உலக பிரதான பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ேகாவிலில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை ஆண்டுதோறும் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலைய துறை மூலமாக அரசு விழாவாக நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட கலெக்டருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பிரகதீஸ்வரர் கோவிலில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு, வருகிற 26-ந் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என்று அறிவிக்கப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இது பொருந்தும். இருப்பினும் இந்த உள்ளூர் விடுமுறையானது தமிழ்நாடு அரசு பள்ளித்தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு (மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளித்தேர்வுகள் உள்பட) பொருந்தாது. அவை ஏற்கனவே அரசால் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்ட நாளில் நடைபெறும்.
26-ந் தேதி உள்ளூர் விடுமுறை அனுசரிப்பதால், அதனை ஈடுசெய்யும் பொருட்டு ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி(சனிக்கிழமை) முழு வேலை நாள் ஆகும். மேலும் உள்ளூர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டும், குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு செயல்படும். இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.