< Back
மாநில செய்திகள்
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 3½ மாதத்தில் 2.600 டி.எம்.சி. தண்ணீர்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 3½ மாதத்தில் 2.600 டி.எம்.சி. தண்ணீர்

தினத்தந்தி
|
21 Aug 2023 2:09 PM IST

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 3½ மாதத்தில் 2.600 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்தது.

கிருஷ்ணா நதி நீர்பங்கீடு திட்டம்

சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி விளங்குகிறது. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.

கிருஷ்ணா நதி பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டு தோறும் தமிழகத்திற்கு 12 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம். சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

கடந்த ஜனவரி மாதம் பூண்டி ஏரியில் போதுமான தண்ணீர் இருப்பு இருந்ததால் கிருஷ்ணா நதி நீரை பெறவில்லை. இந்த நிலையில் கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்தது. இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசை கேட்டுகொண்டனர்.

3½ மாதத்தில் 2.600 டி.எம்.சி. தண்ணீர்

இதனை ஏற்று கடந்த மே மாதம் 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் 3-ந்தேதி பூண்டி ஏரியை சென்றடைந்தது. அதிகபட்சமாக வினாடிக்கு 530 கன அடி விதம் தண்ணீர் சேர்ந்தது. அன்று முதல் நேற்று வரை 3½ மாதத்தில் 2.600 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்ததாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

நேற்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 30.21 அடியாக பதிவானது. 1.788 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 140 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக பேபி கால்வாயில் 40 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மேலும் செய்திகள்