சேலம்
விநாயகர் சிலைகளுடன் ஊர்வலமாகசெல்ல முயன்ற 26 பேர் கைது
|சேலம் மாவட்டம் நங்கவள்ளில் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலமாக செல்ல முயன்ற 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேச்சேரி
நங்கவள்ளி ஒன்றிய இந்து முன்னனியினர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் 8 விநாயகர் சிலைகள் தானாவதியூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த சிலைகளை மேட்டூர் காவிரி ஆற்றில் கரைக்க முடிவு செய்தனர். அதற்காக சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு அவர்கள் உடன்படவில்லை என தெரிகிறது.
தகவல் அறிந்த ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, கூடுதல் துணை சூப்பிரண்டு கண்ணன் மற்றும் போலீசார் இந்து முன்னணி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒன்றன்பின் ஒன்றாக இடைவெளி விட்டு சிலைகளை எடுத்து செல்லுமாறு கூறினர். அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இந்து முன்னணி மேற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன், கோட்ட செயலாளர் பழனிசாமி உள்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்கள் சிலைகளை எடுத்து சென்று காவிரி ஆற்றில் கரைத்தனர். கைதானவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.