புதுக்கோட்டை
புதிய தமிழகம் கட்சியினர் 26 போ் கைது
|மதுபான கடைகளை மூடக்கோரி போராட்டம் நடத்திய புதிய தமிழகம் கட்சியினர் 26 போ் கைது செய்யப்பட்டனர்
தமிழகத்தில் மதுபான கடைகளை மூடக்கோரி புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடை முன்பு மதுபாட்டில்களை உடைத்து போராட்டம் நடத்துவதற்காக புதிய தமிழகம் கட்சியினர் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள் இன்று காலை திரண்டனர். புதிய பஸ் நிலையம் அருகே கோரிக்கை தொடர்பாக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தையொட்டி பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் மதுபாட்டில்களை உடைக்க முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தி மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடா்ந்து அவர்களை கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் மொத்தம் 26 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த போராட்டத்தையொட்டி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள 2 டாஸ்மாக் கடைகள் முன்பு பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் அந்த வழியாக செல்லக்கூடிய சாலையில் இரும்பு தடுப்புகள் வைத்து தடுத்திருந்தனர். போராட்டம் முடிந்த பின்பு சிறிது நேர தாமதத்திற்கு பின் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.