விழுப்புரம்
அரசு இசைப்பள்ளியில் 25-ம் ஆண்டு வெள்ளி விழா
|விழுப்புரம் அரசு இசைப்பள்ளியில் 25-ம் ஆண்டு வெள்ளி விழா நடைபெற்றது.
விழுப்புரம் அரசு இசைப்பள்ளியில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் 25-ம் ஆண்டு வெள்ளிவிழா மற்றும் தமிழிசை விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், அரசு இசைப்பள்ளியின் நோக்கம் தமிழின் பாரம்பரியம் மற்றும் கலாசார நிகழ்வுகளை பாதுகாப்பது ஒன்றே ஆகும். அதனடிப்படையிலேயே ஆண்டுதோறும் மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதோடு அரசு நிகழ்ச்சிகளில் மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு வாய்ப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இங்கு பயின்ற மாணவர்கள் அனைவரும் தாங்கள் பயின்ற கலைத்திறனை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுத்து நமது பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். இவ்விழாவில் விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி, கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குனர் ஹேமநாதன், துணை இயக்குனர் (ஓய்வு) ஜெயபால், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சூடாமணி ராமகிருட்டிணன், மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஈஸ்வரன்பட்டதிரி உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவையொட்டி மாணவ- மாணவிகள் சார்பில் தவில், நாதஸ்வரம், குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சிறந்து விளங்கியவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.