திருப்பூர் அருகே 25-ந்தேதி பா.ஜனதா பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பேசுகிறார்
|திருப்பூரை அடுத்த பல்லடம் மாதப்பூரில் நடைபெற உள்ள பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் 13 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
திருப்பூர்,
பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் நேற்று திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 180 சட்டமன்ற தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். நடைபயணத்தின் பிரமாண்டமான நிறைவு விழா பொதுக்கூட்டம், திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாரத பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இதுவரை எந்த அரசியல் கட்சியும் இதுபோன்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தியது கிடையாது என்ற அளவுக்கு ஏற்பாடுகள் நடக்கின்றன.
இந்த பிரமாண்ட பொதுக்கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். 10 லட்சம் பேர் கட்சியினர், மேலும் 3 லட்சம் பொதுமக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். 400 ஏக்கரில் பொதுக்கூட்ட மைதானம் அமைக்கப்படுகிறது. 600 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம், மக்கள் வந்து செல்வதற்காக 300 ஏக்கர் என மொத்தம் 1,300 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே திரும்பி பார்க்கும் நிகழ்வாக, என் மண், என் மக்கள் நடைபயணத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டம் இருக்கும்.
மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் நடைபயணம் வருகிற 24-ந் தேதி மாலை திருப்பூர் மாநகரில் நடக்கிறது. இதில் தேசிய தலைவர்கள், முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள். தமிழகம் பிரதமர் மோடிக்கு பிடித்தமான மாநிலம். 25-ந் தேதி நடக்கும் பொதுக்கூட்டம், பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக, அரசியல் ரீதியாக, அமைப்பு ரீதியாக தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். பெண்களின் ஆதரவு பா.ஜனதாவுக்கு அதிகம் உள்ளது. தி.மு.க.வை நேரடியாக கேள்வி கேட்கும் முதன்மை கட்சியாக பா.ஜனதா உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.