< Back
மாநில செய்திகள்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 2,584 பேர் எழுதினர்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 2,584 பேர் எழுதினர்

தினத்தந்தி
|
27 Aug 2023 1:00 AM IST

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 2,584 பேர் எழுதினர்.

எழுத்து தேர்வு

தமிழக காவல்துறையில் 750 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுவதற்கான எழுத்து தேர்வு தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இதில் நேற்று காலையில் முதன்மை எழுத்து தேர்வும், மாலையில் தமிழ் மொழிக்கான தகுதி தேர்வும் நடந்தது. அதன்படி இந்த தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர்-துறையூர் நெடுஞ்சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழும வளாகத்தில் உள்ள கல்லூரிகளில் 6 தேர்வு மையங்களில் 158 அறைகளில் நடந்தது. இந்த தேர்வினை எழுதுவதற்காக பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 2,311 ஆண் தேர்வர்களும், 844 பெண் தேர்வர்களும் என மொத்தம் 3,155 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்கள் தேர்வு மையத்துக்கு காலை 8 மணி முதலே வந்து நீண்ட வரிசையில் நின்றனர். அவர்களை போலீசார் மெட்டல் டிடெக்டர் எந்திரம் வழியாக வரவழைத்து சோதனையிட்டும், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையிட்டும் தேர்வு மையத்திற்கு உள்ளே அனுமதித்தனர். மேலும் தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது என்பதால், தேர்வர்கள் கொண்டு வந்திருந்த செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை போலீசார் பெற்று பாதுகாப்பாக வைத்திருந்து, தேர்வு முடிந்து பிறகு அவர்களிடம் ஒப்படைத்தனர்.

2,584 பேர் எழுதினர்

தேர்வு அறைக்குள் சென்ற தேர்வர்களுக்கு காலை 9.45 மணியளவில் ஓ.எம்.ஆர். விடைத்தாள், அறை கண்காணிப்பாளர்களால் வழங்கப்பட்டது. காலை 10 மணியளவில் கேள்வித்தாள் கொடுக்கப்பட்டு தேர்வு தொடங்கியது. மதியம் 12.30 மணிக்கு முதன்மை எழுத்து தேர்வு முடிந்தது. பின்னர் மாலை 3.30 மணியளவில் தமிழ் தகுதி தேர்வு தொடங்கியது. அந்த தேர்வு மாலை 5.10 மணிக்கு முடிவடைந்தது.

காலை, மாலை நடந்த தேர்வினை 1,920 ஆண்களும், 664 பெண்களும் என மொத்தம் 2,584 பேர் எழுதினர். 391 ஆண்களும், 180 பெண்களும் என மொத்தம் 571 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வினை சென்னை தலைமையிட போலீஸ் ஐ.ஜி. (நலன்) நஜ்மல் ஹோடா, மதுரை மண்டல மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜீத்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர்வு நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு பணியில் மொத்தம் 375 போலீசார் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்