மகளிர் கட்டணமில்லா அரசு பஸ்களில் 258 கோடி பயணங்கள் - போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தகவல்
|மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தின் கீழ் 258 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
ஆய்வு கூட்டம்
சென்னை தலைமை செயலகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் கே.கோபால், அனைத்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்கள், தனி அதிகாரிகள் கலந்துகொண்டனர். அவர்கள், போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் சிவசங்கரிடம் விவரித்து கூறினார்கள்.
அப்போது அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், "முதல்-அமைச்சரால் நடைமுறைப்படுத்தப்பட்ட மகளிர் கட்டணமில்லா திட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த திட்டத்தில் தனிக்கவனம் செலுத்தி மிக சிறப்பாக செயல்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். பஸ்கள் இயக்க பயணக் கட்டண வருவாயை தவிர பிற வழிகளில் வரும் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு அவற்றை விரிவாக்கம் செய்திட வேண்டும். போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைகளை அவ்வப்போது கனிவுடன் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காணப்பட வேண்டும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுண்ணறிவு போக்குவரத்து அலகுகளை முழுவதுமாக பயன்படுத்தி போக்குவரத்துத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்திட தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டும்" என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
பின்னர் அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
1,000 புதிய பஸ்கள்
தமிழ்நாட்டில் உள்ள மொத்த நகர பஸ்களில் 7 ஆயிரத்து 164 சாதாரண நகர பஸ்கள் (74.47 சதவீதம்) மகளிர் கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகின்றன. இதன் மூலம் இதுவரை மகளிர் 258.06 கோடி பயண நடைகளை மேற்கொண்டு பயன் அடைந்துள்ளனர்.
மேலும், கட்டணமில்லா பயண வசதியினை மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் துணையாளர்களால் 2.05 கோடி பயண நடைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், 1,000 புதிய பஸ்களை வாங்கவும், அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1,000 பஸ்களை புதுப்பிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மகளிரின் பஸ் பயண பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் 'நிர்பயா' திட்டத்தின் மூலம், மாநகர பஸ்கள் மற்றும் பஸ் நிலையங்களில் கேமராக்கள் மற்றும் அவசரகால பொத்தான்கள் பொருத்தப்பட்டு 2 ஆயிரத்து 500 பஸ்கள் மற்றும் 66 பேருந்து முனையங்கள், பணிமனைகள் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளன.
காலிப்பணியிடங்களை...
பயணிகள், பொதுமக்கள் 24 மணி நேரமும் தங்கள் குறைகள், புகார்களை தெரிவித்திட 1800 599 1500 என்ற உதவி எண் கடந்த 9.3.2023 அன்று தொடங்கப்பட்டது. இதுவரை 2 ஆயிரத்து 302 அழைப்புகள் பெறப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 154 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் 'அரசு பஸ்' என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகர் போக்குவரத்து கழகத்தில் உள்ள வடபழனி, திருவான்மியூர் மற்றும் வியாசர்பாடி ஆகிய பணிமனைகளை நவீனமயமாக்கிட முன் தகுதி நிர்ணயத்திற்காக முதல் கட்டமாக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்களில் கூடுதல் வருவாய்க்காக பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனை நிலையங்கள், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான 10 இடங்களில் நிறுவும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.