ஊரக வளர்ச்சி அலுவலர்களுக்கு 253 வாகனங்கள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
|ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.23.84 கோடி மதிப்பிலான 253 வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பணிகளை திறம்பட கண்காணிக்கும் வகையில், ரூ.23.84 கோடி மதிப்பிலான 253 வாகனங்களை மாவட்ட கலெக்டர்கள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்கள், செயற் பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் வகையில், 10 வாகனங்களுக்கான சேவையை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து, வாகனங்களுக்கான சாவிகளை அலுவலர்களிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனர் பொன்னையா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.