ரூ.2500 லஞ்சம் வாங்கிய வழக்கு; கலெக்டர் அலுவலக ஊழியருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
|ரூ.2500 லஞ்சம் வாங்கிய வழக்கில் கலெக்டர் அலுவலக ஊழியருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை அளித்து திருவள்ளூர் மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
ஆவடி,
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தவர் ரவிக்குமார். இவர், மற்றொரு தனியார் நிறுவனத்துக்கு சல்பர் எடுத்து செல்வதற்கு உரிமம் பெற வேண்டி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.எச். அலுவலகத்தில் 2010-ம் ஆண்டு மனு கொடுத்தார்.
ஆனால் அந்த மனு பரிசீலனை செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதையடுத்து ரவிக்குமார், அதே அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்த விபிஷ்ணன் என்பவரை சந்தித்து மனுவினை பரிந்துரை செய்து உரிமம் பெற்று தர கேட்டார். அதற்கு விபிஷ்ணன் உரிமம் பெற்று தர வேண்டுமானால் ரூ.2 ஆயிரத்து 500 லஞ்சம் தருமாறு கேட்டார்.
4 ஆண்டு சிறை
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ரவிக்குமார், இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரவிக்குமாரிடம் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.2 ஆயிரத்து 500 பணத்தை கொடுத்து அதனை லஞ்சமாக கொடுக்கும்படி அனுப்பினர்.
அதன்படி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்த விபிஷ்ணன், ரவிக்குமாரிடம் இருந்து லஞ்ச பணத்தை பெற்ற போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விபிஷ்ணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கு திருவள்ளூர் தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி வேலரசு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட விபிஷ்ணன் மீது குற்றம் நிரூபணம் ஆனதால் அவருக்கு 4 வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.