< Back
மாநில செய்திகள்
21 நாட்கள் நடந்த மாமல்லபுரம் நாட்டிய விழாவை 25 ஆயிரம் பேர் கண்டுகளித்தனர் - சுற்றுலாத்துறை தகவல்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

21 நாட்கள் நடந்த மாமல்லபுரம் நாட்டிய விழாவை 25 ஆயிரம் பேர் கண்டுகளித்தனர் - சுற்றுலாத்துறை தகவல்

தினத்தந்தி
|
14 Jan 2023 1:43 PM IST

மாமல்லபுரத்தில் 21 நாட்கள் நடந்து முடிந்த நாட்டிய விழாவை 25 ஆயிரம் பேர் கண்டுகளித்துள்ளதாக சுற்றுலாத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில் நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம். 2022-23-ம் ஆண்டுக்கான நாட்டிய விழா 21 நாட்கள் நடைபெற்று நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

இந்த விழாவில் தினமும் ராஜஸ்தான், குஜராத், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநில நாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சிகள், தமிழகத்தை சோந்த கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டியம், கரகாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள், ஓடிசி, குச்சுப்புடி, பெங்காலி நடனம், கதகளி, மோகினியாட்டம், வீணை, புல்லாங்குழல் இசை கச்சேரி உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நேற்று முன்தினம் கடைசி நாள் நிகழ்ச்சியாக மடப்புரம் காளியம்மன் குழுவினரின் கிராமியக்கலை நிகழ்ச்சியும், ஐதராபாத் ஆஷ்ரிதா குழுவினரின் குச்சுபுடி நடனத்துடன் நாட்டிய விழா நிறைவு பெற்றது. நிறைவு விழாவில் பரத நாட்டிய கலைஞர்களுக்கும், நாட்டிய விழாவில் 21 நாட்கள் பணியாற்றிய சுற்றுலாத்துறை ஊழியர்களுக்கும், சுற்றுலாத்துறை உதவி இயக்குனர் சின்னசாமி, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் ஆகியோர் பிரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.

21 நாட்கள் நடந்த இந்த விழாவில் அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து, ஜெர்மன், இத்தாலி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நார்வே, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பயணிகள் மற்றும் உள்நாட்டு பயணிகள் என மொத்தம் 25 ஆயிரம் பேர் கண்டுகளித்துள்ளதாக சுற்றுலாத்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இறுதி நாள் விழாவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விழா முடியும் வரை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கடைசி நிகழ்ச்சி வரை காத்திருந்து கண்டு களித்தனர்.

மேலும் செய்திகள்