திருவள்ளூர்
பொத்தேரியில் போலீஸ் ஏட்டு வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை
|பொத்தேரியில் போலீஸ் ஏட்டு வீட்டில் 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட பொத்தேரி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவர் ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எப். தலைமையகத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அன்பழகன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி நிவேதா வீட்டை பூட்டிக்கொண்டு பக்கத்து தெருவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். மாலை நிவேதா வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் தங்க நகை, பூஜை அறையில் இருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.45 ஆயிரம் போன்றவை திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் நிவேதா புகார் செய்தார். போலீசார் சம்பவம் நடைபெற்ற வீட்டுக்கு வந்து வீட்டில் இருந்த கைரேகைகளை பதிவு செய்து அக்கம் பக்கத்தில் விசாரித்தனர்.
இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதி யில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை தேடி வருகின்றனர்.