கன்னியாகுமரி
மார்த்தாண்டம் அருகே 25 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்
|மார்த்தாண்டம் அருகே 25 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒலிபெருக்கி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே 25 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒலிபெருக்கி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
போலீசார் வாகன சோதனை
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 22 பேர் பலியான சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இதனை தொடர்ந்து மார்த்தாண்டம் பகுதிகளில் கள்ளச்சாராயம் ஏதேனும் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினீஷ் பாபு தலைமையில் போலீசார் கழுவன்திட்டை சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒலிபெருக்கி கடை முன்பு வேகமாக ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். உடனே அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் பெரிய பிளாஸ்டிக் கேனும், சிறிய பிளாஸ்டிக் கேனும் இருந்தது. மேலும் அந்த கேனில் கள்ளச்சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கள்ளச்சாராயம் பறிமுதல்
அதை தொடர்ந்து 25 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கள்ளச்சாராயத்தை கடத்தி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், மருதங்கோடு கலையன்குளம் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் மாத்யூ (வயது 42) என்பதும், அவர் கழுவன்திட்டையில் பல ஆண்டுகளாக ஒலிபெருக்கி கடை வைத்து தொழில் நடத்தி வருவதும் தெரிய வந்தது.
மேலும் அவர் இந்த கள்ளச்சாராயத்தை தனது மோட்டார் சைக்கிளில் பாறசாலையில் இருந்து களியக்காவிளை பனங்காலை பகுதி வழியாக கழுவன்திட்டைக்கு கடத்தி வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக கள்ளச்சாராயத்தை கடத்தி வந்து ஒலிபெருக்கி கடையில் வைத்து அவர் விற்பனை செய்ததும் விசாரணையில் அம்பலமானது.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதே சமயத்தில் ஜஸ்டின் மாத்யூக்கு கள்ளச்சாராயத்தை சப்ைள செய்தவரை தேடிவருகின்றனர்.