திருவாரூர்
ரூ.25 லட்சத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி
|மன்னார்குடி நகராட்சியில் ரூ.25 லட்சத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை நகரசபை தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மன்னார்குடி:
தூர்வாரும் பணி
பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மன்னார்குடி நகராட்சியில் தண்ணீர் தேங்காமல் வடிய மழைநீர் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரும் பணி ரூ.25 லட்சம் செலவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.மன்னார்குடியில் உள்ள முக்கிய மழைநீர் வடிகால்களான மேலவாசல்-காளவாய் கரை வாய்க்கால், முல்லை நகர் வடிகால் வாய்க்கால், முதல் சேத்தி வடிகால் வாய்க்கால், துண்டக் கட்டளை வடிகால் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
நகரசபை தலைவர் ஆய்வு
இந்த பணிகளை நகர சபை தலைவர் மன்னை. சோழராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர் கூறுகையில், பருவ மழை காலத்தில் நகர பகுதியில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கு ஏதுவாக இந்த தூர்வாரும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது.
இதனால் நகர பகுதியில் கொசு உற்பத்தி மற்றும் கழிவுநீர் தேங்குதல் போன்றவற்றால் பரவும் தொற்றுநோய்கள் தடுக்கப்பட்டு சுகாதாரம் மேம்பாடு அடையும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
அந்த வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பருவமழை தொடங்குவதற்கு முன்பே இந்த தூர்வாரும் பணிகள் முடிக்கப்படும் என்றார்.இந்த ஆய்வின் போது மன்னார்குடி நகர சபை துணைத் தலைவர் கைலாசம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.