திருச்சி
திருச்சிக்கு 3 பயணிகள் கடத்தி வந்த ரூ.25¾ லட்சம் தங்கம் பறிமுதல்
|திருச்சிக்கு 3 பயணிகள் கடத்தி வந்த ரூ.25¾ லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தங்கம் கடத்தல்
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஸ்கூட் விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணி ஒருவரை தனியாக அழைத்துச்சென்று சோதனை செய்தனர். இதில் அவர் தனது உடலில் பசை வடிவில் மறைத்து 120 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மயிலாடுதுறையை சேர்ந்த சதீஷ் என்பது தெரியவந்தது.
ரூ.25¾ லட்சம் மதிப்பிலான...
இதேபோல் துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணி, தனது உடைமையில் எடுத்து வந்த தாளில் துகள் வடிவில் மறைத்து கடத்தி வந்த 128 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அதனை கடத்தி வந்த திருச்சியை சேர்ந்த சரவணகுமாரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணி ஒருவரை தனியே அழைத்துச் சென்று சோதனை செய்தபோது, அவர் பிஸ்டனில் மறைத்து எடுத்து வந்த 182 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன்படி 3 பயணிகளிடம் இருந்தும் மொத்தம் ரூ.25 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான 430 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.