< Back
மாநில செய்திகள்
வடபழனியில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 25 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு
சென்னை
மாநில செய்திகள்

வடபழனியில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 25 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு

தினத்தந்தி
|
3 Feb 2023 1:12 PM IST

சென்னை வடபழனியில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 25 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டுபோனது. இதுபற்றி வேலைக்கார பெண் மற்றும் காவலாளியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆனந்த் (வயது 54). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவர், தினமும் வேலைக்கு செல்லும்போது வீட்டின் சாவியை காவலாளியிடம் கொடுத்துவிட்டு செல்வது வழக்கம்.

அவரது வீ்ட்டுக்கு வேலை செய்ய வரும் பெண், காவலாளியிடம் சாவியை வாங்கி வீட்டு வேலைகளை செய்து விட்டு மீண்டும் சாவியை காவலாளியிடம் கொடுத்துவிட்டு செல்வார்.

கடந்த மாதம் 23-ந் தேதி ஆனந்த், வீட்டை பூட்டிவிட்டு சாவியை வழக்கம்போல் காவலாளியிடம் கொடுத்துவிட்டு குடும்பத்துடன் பெங்களூரு சென்று விட்டார். நேற்று முன்தினம் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

நேற்று காலை பூஜை செய்வதற்காக பார்த்தபோது வீட்டில் இருந்த 25 கிலோ வெள்ளி பூஜை பொருட்கள் திருட்டுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வடபழனி போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி மற்றும் ஆனந்த் வீட்டுக்கு வேலை செய்ய வரும் வேலைக்கார பெண் ஆகிய இருவரிடமும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

திருட்டு போன வெள்ளி பொருட்கள் அனைத்தும் அவருடைய மகனின் திருமணத்துக்கு பெண் வீ்ட்டார் சீர்வரிசையாக கொடுத்ததாக தெரிகிறது. அவற்றை வேலைக்கார பெண் சிறுக, சிறுக திருடி சென்றாரா? அல்லது வேறு யாரும் திருடினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்