< Back
மாநில செய்திகள்
25 நாட்கள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில்: நாளை மறுநாள் தொடக்கம்
மாநில செய்திகள்

25 நாட்கள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில்: நாளை மறுநாள் தொடக்கம்

தினத்தந்தி
|
2 May 2024 5:38 AM IST

தமிழகத்தில் உள்மாவட்டங்களில் இயல்பைவிட சற்று வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவித்து இருக்கிறது.

சென்னை,

'அக்னி நட்சத்திரம்' என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும். தமிழ் பஞ்சாங்கம் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் (கத்தரி வெயில்) கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு கத்தரி வெயில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) தொடங்குகிறது.

இந்த கத்தரி வெயில் வருகிற 28-ந்தேதி வரை அதாவது, 25 நாட்கள் தொடர்ந்து வாட்டி வதைக்க காத்திருக்கிறது. பொதுவாக கத்தரி வெயில் காலத்தில்தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.

அதிலும் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி, திருத்தணி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரியையும், சில நேரங்களில் 105 டிகிரி கடந்தும் வெயில் பதிவாகி வருகிறது.

இதில் ஈரோடு, சேலத்தில் 108 டிகிரியையும் கடந்து இந்த ஆண்டில் இதுவரை இல்லாத வெப்ப அளவாக பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 11-வது நாளாக நேற்று 110 டிகிரி வெயில் கொளுத்தியது.

இங்கே இப்படி என்றால், கோடை வாசஸ்தலமான ஊட்டி, கொடைக்கானல், வால்பாறையில்கூட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஊட்டியில் இதுவரை இல்லாத வெப்ப அளவு பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் கத்தரி வெயில் காலத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் 109 டிகிரியை தொட்டதுதான் அதிகபட்ச வெயில் பதிவாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே, ஈரோட்டில் 109 டிகிரியை கடந்துவிட்டது. அந்தவகையில் பார்க்கும் போது, இந்த ஆண்டு 110 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் சுட்டெரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு மே மாதத்தில் 119.48 டிகிரி பாரன்ஹீட் பதிவானதுதான் இதுவரை பதிவான உச்சபட்ச வெயில் அளவாக இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

4 நாட்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும் - வானிலை ஆய்வு மையம்

கத்தரி வெயில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தொடங்க உள்ள நிலையில், இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரித்து இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

அதிலும் குறிப்பாக திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் இயல்பைவிட 5 டிகிரி முதல் 9 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் எனவும், அதில் சில இடங்களில் 110 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி வெயில் பதிவாகலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், உள்மாவட்டங்களிலும் இயல்பைவிட சற்று வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என அறிவித்து இருக்கிறது.

இதுதவிர மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்