< Back
மாநில செய்திகள்
விழுப்புரம் மாவட்டத்துக்கு 24-ந் தேதி உள்ளூர் விடுமுறை
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்துக்கு 24-ந் தேதி உள்ளூர் விடுமுறை

தினத்தந்தி
|
11 Feb 2023 12:15 AM IST

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்துக்கு 24-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் பழனி அறிவித்துள்ளார்

விழுப்புரம்

அங்காளம்மன் கோவில் தேரோட்டம்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதுபோல் இந்த ஆண்டுக்கான மாசிப்பெருவிழா வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. இதில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

உள்ளூர் விடுமுறை

இதையொட்டி விழுப்புரம் மாவட்ட பக்தர்களின் வசதிக்காக அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சி.பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் வருகிற 24-ந் தேதியன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள தேர் உற்சவத்தை முன்னிட்டு அன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அந்த தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும்பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் அனைத்து சார்நிலை கருவூலங்களும் குறைந்த பணியாளர்களை கொண்டு இயங்கும்.

மேலும் மாணவ-மாணவிகளுக்கு அன்று பள்ளி இறுதித்தேர்வுகள் நடைபெற தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும். உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 24-ந் தேதிக்கு பதிலாக அடுத்த மாதம் (மார்ச்) 4-ந் தேதி (சனிக்கிழமை) பணிநாள் ஆகும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்