விழுப்புரம்
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,414 வழக்குகளுக்கு தீர்வு
|விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,414 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
விழுப்புரம்
தேசிய மக்கள் நீதிமன்றம்
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான பூர்ணிமா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி அனைவரையும் வரவேற்றார். குடும்பநல நீதிபதி தேன்மொழி, சிறப்பு மாவட்ட நீதிபதி சாந்தி, சார்பு நீதிபதி பஷீர், அரசு வக்கீல்கள் சுப்பிரமணியன், நடராஜன், வக்கீல் சங்க தலைவர்கள் தயானந்தம், காளிதாஸ், ஸ்ரீதர், நீலமேகவண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முகாமில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா பேசுகையில், விழுப்புரம் மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம். இப்பகுதியில் விவசாயிகள் சிலர், நிலம் தொடர்பாக வழக்குகள் தொடுக்கிறார்கள். இதனால் விவசாயம் செய்ய முடியாமல் பல ஆண்டுகள் வீணடிக்கப்படுகிறது. விவசாயிகள் மத்தியில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என்பது குறைவாக இருப்பதால் சகோதரர்களுக்கு மத்தியிலான வழக்குகள் நிலுவையில் உள்ளது. விட்டுக்கொடுத்து சென்றால் எவ்வளவோ வழக்குகளில் தீர்வு காண முடியும், நீதியும் உடனடியாக கிடைக்க வேண்டும் என்றுதான் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் விரும்புகிறது என்றார்.
2,414 வழக்குகளுக்கு தீர்வு
இம்முகாமில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், குற்றவியல் வழக்குகள், வங்கி சாரா கடன் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் விசாரணை செய்யப்பட்டன. இதில் நிலுவையில் உள்ள வழக்குகளாக 5,675 வழக்குகளும், நிலுவையில் இல்லாத வழக்குகளாக 2,200 வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நீதிபதிகள், வக்கீல்கள், சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர், வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு கண்டனர்.
இதன் முடிவில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 2,301 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.22 கோடியே 87 லட்சத்து 41 ஆயிரத்து 740-க்கு தீர்வு காணப்பட்டது. இதேபோல் நிலுவையில் இல்லாத வழக்குகளில் 113 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.88 லட்சத்து 47 ஆயிரத்து 100-க்கு தீர்வு காணப்பட்டது.