கரூர்
விபத்தில் இறந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.24¼ லட்சம் நிதியுதவி
|அரவக்குறிச்சியில் விபத்தில் இறந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.24¼ லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் தாதங்கோட்டையை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 34). இவர் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி முதல் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி பணி நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் சென்றபோது அரவக்குறிச்சி அருகே சிமெண்டு லோடு ஏற்றி வந்த லாரி மோதி பலியானார்.
இதையடுத்து, பலியான விஜயகுமார் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க 2009 பேட்ச் போலீசார் முடிவு செய்தனர். அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள 4,753 போலீசார் சேர்ந்து மொத்தம் ரூ.24 லட்சத்து 30 ஆயிரத்து 943 நிதியை திரட்டினர். இதனைதொடர்ந்து விஜயகுமார் குடும்பத்தார் நேற்று அரவக்குறிச்சிக்கு வரவழைக்கப்பட்டு அவரது தாயார் கனகமணியிடம் ரூ.12 லட்சமும், மீதி தொகையை விஜயகுமாரின் மனைவி செல்லமணி, மகன் ஜனசுதன் ஆகியோரிடம் அரவக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் 2009 பேட்ச் போலீசார் வழங்கினார்கள்.