சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே 24-ந்தேதி ரெயில் சேவை ரத்து
|ஜோலார்பேட்டை-காட்பாடி இடையே இயக்கப்படும் மின்சார ரெயிலும் 7, 11, 27 ஆகிய தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை,
சென்னை ரெயில்வே கோட்டத்தில் தண்டவாளத்தை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. வந்தே பாரத் அதிவேக ரெயில் 130 கி.மீ வேகத்தில் இயக்கக்கூடிய வகையில் ரெயில் பாதையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே தண்டவாளத்தை தரம் உயர்த்தும் பணி நடக்கிறது.
பல்வேறு பிரிவுகளாக இந்த பணியை மேற்கொள்ள தெற்கு ரெயில்வே முடிவு செய்து உள்ளது. இந்த மாதத்தில் நடைபெறும் பணிகளுக்காக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. 4 மின்சார ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுகின்றன. காட்பாடி-ஜோலார்பேட்டை இடையே ஓடும் மின்சார ரெயில் நாளை 7-ந்தேதி, 11 மற்றும் 27-ந்தேதி ஆகிய நாட்களில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல ஜோலார்பேட்டை-காட்பாடி இடையே இயக்கப்படும் மின்சார ரெயிலும் 7, 11, 27 ஆகிய தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வேலூர் கண்டோன்ட்மென்ட்-அரக்கோணம் இடையே இயக்கப்படும் மின்சார ரெயில் 24-ந்தேதி முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல அரக்கோணம்-வேலூர் கண்டோன்ட்மென்ட் இடையே ஓடும் மின்சார ரெயிலும் 24-ந்தேதி முழுவதும் இயங்காது.
இதுதவிர 4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் காட்பாடி-சென்ட்ரல் இடையே 24-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது. காட்பாடி வரை மட்டும் இன்டர்சிட்டி இயக்கப்படும். மைசூரு-சென்னை சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் (12610) எக்ஸ்பிரஸ் காட்பாடி-சென்ட்ரல் இடையே மட்டும் 24-ந்தேதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
அதிகாலை 5 மணிக்கு புறப்படும் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி வரை இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து பகல் 2.30 மணிக்கு புறப்படும் கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சென்ட்ரல்-காட்பாடி இடையே 24-ந் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் காட்பாடியில் இருந்து 4.20 மணிக்கு புறப்படும். பகல் 3.30 மணிக்கு புறப்படும் சென்ட்ரல்-பெங்களூரு லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ட்ரல்-காட்பாடி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த ரெயில் காட்பாடியில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்படும். சென்ட்ரலில் இருந்து 11-ந் தேதி காலை 10.20 மணிக்கு புறப்படும் சாய்நகர் ஸ்ரீரடி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22601) 2 மணி நேரம் தாமதமாக பகல் 12.20 மணிக்கு புறப்படும்.
இதே போல் சென்ட்ரலில் இருந்து 11-ந் தேதி பிற்பகல் 1.15 மணிக்கு மங்களூர் புறப்படும் எக்ஸ்பிரஸ் பிற்பகல் 1.30 மணிக்கு 20 நிமிடம் தாமதமாக புறப்படும். இதே போல் சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 1.45 மணிக்கு மைசூரு புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் 10 நிமிடம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.