ஈரோடு
24 மதுக்கடைகள் மூடப்பட்டன - மதுபானங்கள் குடோனில் ஒப்படைப்பு
|24 மதுக்கடைகள் மூடப்பட்டன மதுபானங்கள் குடோனில் ஒப்படைக்கப்பட்டன
ஈரோடு மாவட்டத்தில் 24 மதுக்கடைகள் நேற்று மூடப்பட்டு அங்கிருந்த மதுபானங்கள் குடோனில் ஒப்படைக்கப்பட்டன.
24 கடைகள் மூடப்பட்டன
தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், அருகருகே 2 கடைகள், குறைந்த வருவாய் தரும் கடைகள், கட்டிட உரிமையாளர்கள் காலி செய்ய பிரச்சினை தரும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதில் ஈரோடு மாவட்டத்தில் 24 கடைகள் நேற்று மூடப்பட்டன. அதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் அகில்மேடு வீதியில் 2 கடைகள், சம்பத் நகர், சூரம்பட்டி நால்ரோடு மற்றும் சென்னிமலை ரோடு அரசு ஐ.டி.ஐ. அருகே தலா ஒரு கடை என மொத்தம் 24 கடைகள் மூடப்பட்டுள்ளன.
மதுபானம் ஒப்படைப்பு
இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் கூறும்போது, 'மூடப்பட்ட கடைகளில் உள்ள மதுபானங்களை நேற்று முன்தினம் இருப்பு எடுத்து, பெட்டிகளில் தயார்படுத்தினோம். நேற்று காலை மாவட்ட மேலாளரிடம் இருந்து வரப்பெற்ற உத்தரவுப்படி கடையை மூடி, அங்கிருந்த மதுபானங்கள், அட்டை பெட்டிகள், இதர பொருட்கள், பணம் வைக்கும் பாதுகாப்பு பெட்டிகள், ஆவணங்கள் உள்ளிட்டவைகளை பட்டியலிட்டோம்.
மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் இருந்து வரப்பெற்ற லாரியில் அவற்றை அனுப்பி, அலுவலகத்தில் கணக்கை ஒப்படைத்துள்ளோம். ஒவ்வொரு கடையிலும் ஒரு மேற்பார்வையாளர், ஒரு விற்பனையாளர், ஒரு உதவியாளர் என 3 பேரும் சில கடைகளில் கூடுதலாக ஒருவரும் பணி செய்தோம். நேற்று கடையை மூடி, அங்கிருந்த மதுபானங்களை ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டோம். இன்று (வெள்ளிக்கிழமை) எங்களுக்கான பணி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்று, எங்களுக்கு ஒதுக்கும் கடை அல்லது குடோன், அலுவலக பணியில் ஈடுபடுவோம்' என்றனர்.