< Back
மாநில செய்திகள்
சென்னையில் 3 திட்ட பகுதிகளில் ரூ.410 கோடி மதிப்பீட்டில் 2,364 அடுக்குமாடி குடியிருப்புகள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சென்னை
மாநில செய்திகள்

சென்னையில் 3 திட்ட பகுதிகளில் ரூ.410 கோடி மதிப்பீட்டில் 2,364 அடுக்குமாடி குடியிருப்புகள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

தினத்தந்தி
|
24 Sept 2023 9:04 AM IST

சென்னையில் 3 திட்ட பகுதிகளில் ரூ.409.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் 2,364 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கொய்யாதோப்பு திட்டப்பகுதியில் 324 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும், சேத்துப்பட்டு மீனாம்பாள் சிவராஜ் திட்ட பகுதியில் 240 புதிய குடியிருப்புகளுக்கும், கோட்டூர்புரம் திட்ட பகுதியில் 1,800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும், என மொத்தம் 3 திட்ட பகுதிகளில் ரூ.409.74 கோடி மதிப்பீட்டில் 2,364 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அந்தந்த பகுதிகளுக்கு சென்று அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொய்யாதோப்பு திட்டப்பகுதியில் 1973-ம் ஆண்டு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட 302 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தன. அதை அகற்றி 324 புதிய குடியிருப்புகளுக்கும்;

எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேத்துப்பட்டு மீனாம்பாள் சிவராஜ் நகர் திட்டப்பகுதியில் 1973-ம் ஆண்டு கட்டப்பட்டு பழுதடைந்த 224 பழைய குடியிருப்புகளை அகற்றி 240 புதிய குடியிருப்புகளுக்கும்; சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் 1974-ம் ஆண்டு கட்டப்பட்டு சிதிலமடைந்த 1,476 குடியிருப்புகளை அகற்றி 1,800 புதிய குடியிருப்புகளும் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.409.74 கோடி செலவில் 3 திட்டப்பகுதிகளில் புதிதாக 2,364 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. அதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:- சென்னையில் வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட 27 ஆயிரத்து 138 வீடுகளும், பிற மாவட்டங்களில் 3,354 வீடுகளும் என மொத்தம் 30 ஆயிரத்து 492 பழைய வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. 2021-2022 மற்றும் 2022-2023 நிதியாண்டுகளில் ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் 15 ஆயிரம் புதிய வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி 30 திட்டப்பகுதிகளில் 7,582 வீடுகள் இடிக்கப்பட்டு 9,522 வீடுகள் கட்டும் பணியும், அதில் 5 திட்டப்பகுதிகளில் 1,147 புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணியும் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்தம் 8 திட்டப்பகுதிகளில் 3,511 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 22 திட்டப்பகுதிகளில் 6,011 குடியிருப்புகளுக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

18 மாதத்தில் பணிகளை நிறைவு செய்து, ஏற்கனவே இருந்த குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள குடியிருப்புகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை மாநகராட்சியின் சார்பில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கே.பி.பார்க் திட்டப்பகுதியில் அமைக்கப்பட்ட கால்பந்து விளையாட்டு மைதானத்தையும், எழும்பூர் சட்டமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தையும்; சேத்துபட்டு மேயர் சத்தியமூர்த்தி சாலையில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளியில் 39 ஸ்மார்ட் வகுப்பறைகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச்செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் சங்கர், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், பணிகள் குழு தலைவர் சிற்றரசு மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் சிவராஜசேகரன், ஜெகதீசன், கதிர் முருகன், வாரிய தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம், நிர்வாக பொறியாளர்கள் சுடலைமுத்து குமார், ஹரிகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்