< Back
மாநில செய்திகள்
நம்மை காக்கும் 48 திட்டத்தில் 2,327 பேருக்கு சிகிச்சை
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

'நம்மை காக்கும் 48' திட்டத்தில் 2,327 பேருக்கு சிகிச்சை

தினத்தந்தி
|
19 Aug 2022 6:24 PM GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை ‘நம்மை காக்கும் 48’ திட்டத்தின் கீழ் 2,327 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 'நம்மை காக்கும் 48' திட்டத்தின் கீழ் 2,327 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

'நம்மை காக்கும் 48' திட்டம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு(2021) செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த விழாவில் சாலை விபத்தால் எற்படும் உயிரிழப்பை குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்துக்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான 'நம்மை காக்கும் 48' திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

ரூ.1 லட்சம் வரை சிகிச்சை

தேர்தெடுக்கப்பட்ட 81 மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை சிகிச்சை மேற்கொள்ளப்படும். நம்மை காக்கும் 48 திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் குறித்த விவரங்கள் மாவட்ட வாரியாக பட்டியலிடப்பட்டு பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் 1,177 பேருக்கு ரூ.83 லட்சத்து 67 ஆயிரத்து30 மதிப்பிலும், சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் 452 பேருக்கு ரூ.26 லட்சத்து 1,500 மதிப்பிலும், வைத்தீஸ்வரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் 172 பேருக்கு ரூ.5 லட்சத்து 75 ஆயிரத்து 700 மதிப்பிலும், குத்தாலம் அரசு ஆஸ்பத்திரியில் 382 பேருக்கு ரூ.17 லட்சத்து 54 ஆயிரத்து 550 மதிப்பிலும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

2,327 பேருக்கு சிகிச்சை

மேலும் பொறையாறு அரசு ஆஸ்பத்திரியில் 45 பேருக்கு ரூ.2 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலும், தரங்கம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் 99 பேருக்கு ரூ.5 லட்சத்து 99 ஆயிரத்து 350 மதிப்பிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் கடந்த 9 மாதத்தில் 2,327 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்