< Back
மாநில செய்திகள்
ரூ.2,302 கோடியில் காலணி உற்பத்தி ஆலை; முதல்-அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
மாநில செய்திகள்

ரூ.2,302 கோடியில் காலணி உற்பத்தி ஆலை; முதல்-அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

தினத்தந்தி
|
18 April 2023 5:34 AM IST

உளுந்தூர்பேட்டை தொழிற்பூங்காவில் ரூ.2,302 கோடியில் காலணி உற்பத்தி ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

சென்னை,

இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தவேண்டும் என்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்த்திடுவது மட்டுமல்லாமல், பெருமளவில் வேலைவாய்ப்பு அளித்திடும் தொழில் முதலீடுகளையும் ஈர்க்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 2024-ம் ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை சிறப்பான முறையில் நடத்தி, பெருமளவிலான முதலீட்டினை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

தைவான் நாட்டை சேர்ந்த 'பவு சென்' கார்ப்பரேஷன் காலணிகள் தயாரிப்பில் உலகளவில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனம், உலக புகழ்பெற்ற காலணி நிறுவனங்களுக்கு ஒப்பந்த உற்பத்தியாளராக விளங்குகிறது. 'பவு சென்' குழுமத்தை சேர்ந்த ஹை க்ளோரி புட்வேர் இந்தியா நிறுவனம், காலணி உற்பத்திக்காக அடுத்த 12 ஆண்டுகளில், ரூ.2 ஆயிரத்து 302 கோடி முதலீடு மற்றும் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சிப்காட் உளுந்தூர்பேட்டை தொழிற்பூங்காவில் காலணிகள் உற்பத்திக்கான ஆலை அமைக்க உள்ளது. இந்த திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசுக்கும், ஹை க்ளோரி புட்வேர் இந்தியா பிரைவேட் நிறுவனத்துக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.

வேலைவாய்ப்பு உருவாகும்

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022 முதல்-அமைச்சரால் வெளியிடப்பட்டதன் தொடர்ச்சியாக, இந்த திட்டம் ஈர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தொழில் வளர்ச்சி மாநிலம் முழுவதும் பரவலாக இருக்கவேண்டும் என்பதன் அடிப்படையில், பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடுகளை ஈர்த்திட அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பலன் அளித்திடும் வகையிலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமைக்கப்படுவதன் மூலமாக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சார்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும். அதுமட்டுமின்றி, ஏற்கனவே, காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாடு, தனது நிலையை மேலும் வலுப்படுத்திக்கொள்ள உதவும்.

இந்த நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் விஷ்ணு, 'பவு சென்' குழுமத்தின் துணைத்தலைவர்கள் ஜார்ஜ் லியு மற்றும் அல்வின் ஹூ, திட்ட அலுவலக இயக்குனர் லின்ச் லின் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்