சென்னை
திருவொற்றியூரில் கன்டெய்னர் பெட்டியை உடைத்து 2,300 கிலோ பருப்பு திருட்டு
|திருவொற்றியூரில் கன்டெய்னர் யார்டில் நிறுத்தி இருந்த கன்டெய்னர் பெட்டியின் ‘சீல்’ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 2,300 கிலோ பருப்பை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்டெய்னர் பெட்டிக்கு 'சீல்'
சென்னையைச் சேர்ந்த கார்கோ நிறுவனம் ஒன்று, மராட்டிய மாநிலத்தில் இருந்து 23 ஆயிரத்து 830 கிலோ பருப்பு மூட்டைகள் அடங்கிய கன்டெய்னர் பெட்டியை கப்பலில் வரவழைத்து இருந்தது.
சென்னை துறைமுகத்தில் இருந்து பருப்பு லோடுடன் கூடிய கன்டெய்னர் பெட்டியை கன்டெய்னர் லாரியில் ஏற்றி திருவொற்றியூர் பகுதியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான கான்கார்ட் கன்டெய்னர் யார்டுக்கு கொண்டு வந்து நிறுத்தி வைத்து இருந்தனர். பருப்பு மூட்டை இருந்த கன்டெய்னர் பெட்டிக்கு கார்கோ நிறுவன ஊழியர்கள் 'சீல்' வைத்துவிட்டு சென்றனர்.
2,300 கிலோ பருப்பு திருட்டு
இந்தநிலையில் கார்கோ நிறுவன ஊழியர்கள் வந்து பார்த்தபோது கன்டெய்னர் பெட்டியில் இருந்த 'சீல்' உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், கன்டெய்னர் பெட்டியில் இருந்த பருப்பு மூட்டைகளை எடைபோட்டு பார்த்தபோது சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 2 ஆயிரத்து 300 கிலோ பருப்பு திருடப்பட்டு இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து திருவொற்றியூர் போலீசில் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த தனியார் கார்கோ நிறுவன அதிகாரி ராம்குமார் (வயது 41) புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் கன்டெய்னர் யார்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.