வேலூர்
23 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்
|கூனம்பட்டி மலைப்பகுதியில் 23 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.
சாராய வேட்டை
வேலூர் மாவட்டத்தில் சாராய விற்பனையை தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் சாராய வேட்டை நடத்தி வருகின்றனர். அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் சிறப்பு தனிப்படை போலீசார் அல்லேரி, அப்புக்கல், கூனம்பட்டி ஆகிய பகுதியில் டிரோன் உதவியுடன் சாராய வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பல்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
இந்த சோதனையின்போது கூனம்பட்டி பகுதியில் ஒரே இடத்தில் 22 ஆயிரத்து 700 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டதை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான குழுவினர் கண்டறிந்தனர். மலைப்பகுதியில் சின்டெக்ஸ் தொட்டியை தரைக்கு கீழ் நூதனமாக பதுக்கி வைத்திருந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஊறலை அங்கேயே கொட்டி அழித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
ஒரே இடத்தில்
வேலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் ஒரே இடத்தில் சுமார் 23 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்தது இதுவே முதல்முறையாகும். சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்வதற்கு முன்பு அவர்களுக்கு உதவுபவர்களை கண்டறிய திட்டமிட்டோம். அதன்படி மலைசார்ந்த பகுதிகளில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலையை கண்காணித்து வந்தோம். அங்கு அதிகப்படியான வெல்லம் வாங்குபவர்கள் குறித்த விவரத்தை சேகரித்தோம். இதில் கீழ்கொத்தூர் கிராமத்தை சேர்ந்த 3 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
கெட்டுப்போன தண்ணீர்
அவர்களை பிடித்து ரகசியமாக விசாரித்தபோது, சாராயம் காய்ச்சுவதற்கு வாங்கி செல்வதை ஒப்புக்கொண்டனர். பின்னர் அவர்களை கைது செய்தோம். தொடர்ந்து மலைப்பகுதியில் நடத்திய வேட்டையில் சாராய ஊறல்களை பறிமுதல் செய்துள்ளோம். ஊறல்களுக்கு கெட்டுப்போன தண்ணீரை பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இதன் மூலம் சாராயம் விஷச்சாராயமாகவும் மாற வாய்ப்பு இருந்தது. எனவே சாராயம் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றனர்.