புதுக்கோட்டை
வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 23 பவுன் நகைகள் கொள்ளை
|கந்தர்வகோட்டை அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 23 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
23 பவுன் நகை கொள்ளை
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே அரவம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணுச்சாமி. இவரது மகன் கண்ணதாசன் (வயது 28). இவரது தாய் அமராவதி. இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்தவர்கள் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் பின் பக்க உதவை உடைத்து உள்ளே வந்த மர்மநபர்கள் 3 பேர் 2 பீரோவில் இருந்த 23 பவுன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு வீட்டின் முன் பகுதிக்கு வந்தனர்.
அப்போது அங்கு அமராவதி படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த மர்மநபர்கள் அமராவதி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றனர். இதையடுத்து கண்விழித்த அமராவதி திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார். இதையடுத்து மர்மநபர்கள் 3 பேரும் அங்கிருந்து வீட்டின் பின் புறமாக தப்பி சென்று விட்டனர்.
வெள்ளி பொருட்கள்
இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மர்மநபர்களை ேதடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. ஆனால் அப்பகுதியில் வயல் வெளியில் மர்மநபர்கள் திருடி சென்ற பெட்டி ஒன்று மட்டும் கிடந்தது. இதையடுத்து அந்த பெட்டியை எடுத்து பார்த்த போது, அதில் இருந்த பட்டுப்புடவைகள், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்து விட்டு வெறும் பெட்டியை மட்டும் வீசி சென்றுள்ளனர்.
போலீசார் வலைவீச்சு
இதுகுறித்து கண்ணதாசன் கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து கண்ணதாசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 23 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கந்தர்வகோட்டை அருகே வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே பின்பக்க உதவை உடைத்து 23 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.