நீலகிரி
தென்மேற்கு பருவமழை 23 சதவீதம் குறைவு
|நீலகிரியில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 23 சதவீதம் குறைவாக பெய்து உள்ளது.
நீலகிரியில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 23 சதவீதம் குறைவாக பெய்து உள்ளது.
தென்மேற்கு பருவமழை
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழையும், ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழையும் பெய்யும். தென்மேற்கு பருவமழை சராசரியாக 760 மில்லி மீட்டர், வடகிழக்கு பருவமழை 300 மி.மீ., கோடை மழை 230 மி.மீ. பெய்வது வழக்கம்.
நீலகிரியில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 124 சதவீதம் கூடுதலாக பெய்தது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கம்போல் கேரளாவில் ஜூன் 1-ந் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த ஆண்டு தாமதமாக ஜூன் 8-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
23 சதவீதம் குறைவு
கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதுகுறித்து காலநிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 11 வருட சராசரி அளவுப்படி ஜூன் மாதத்தில் 178 மில்லி மீட்டர் மழை பெய்யும். இந்த ஆண்டு 102 மி.மீ. மட்டுமே பெய்தது. இதேபோல் ஜூலை மாத சராசரி மழையளவு 187 மி.மீ. கடந்த ஜூலை மாதம் 232 மி.மீ. மழை பதிவானது. இது சராசரியை விட அதிகம்.
ஆகஸ்டு மாத சராசரியான 240 மில்லி மீட்டருக்கு பதிலாக வெறும் 90 மி.மீ. மட்டுமே பெய்தது. இதேபோல் செப்டம்பர் மாத சராசரி மழையளவு 155 மி.மீ. கடந்த மாதம் 161 மி.மீ. மழை பெய்தது. இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை 23 சதவீதம் குறைவாக பெய்து உள்ளது. இதனால் நீர்நிலைகளில் தற்போது குறைந்த அளவே நீர் இருப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை கை கொடுத்தால் நீலகிரியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.